பக்கம் எண் :

43

43. அறிவுடைமை
 

1. அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்.

அறிவு, அழிவு வராமல் காக்கும் கருவியாகும்; அன்றியும் பகைகொண்டு எதிர்ப்பவர்க்கும் அழிக்க முடியாத உள்ளரணும் ஆகும். 421
 

2. சென்ற இடத்தால் செலவிடா தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு.

மனத்தைச் சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.422
 

3. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் (கேட்டவாறே கொள்ளாமல்) அப்பொருளின் மெய்யான பொருளைக் காண்பதே அறிவாகும். 423
 

4. எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு.

தான் சொல்லுவன எளிய பொருளையுடையனவாகப் பதியுமாறு சொல்லித், தான் பிறரிடம் கேட்பவற்றின் நுட்பமான பொருளையும் ஆராய்ந்து காண்பது அறிவாகும்.424
 

5. உலகம் தழீஇயது ஒட்பம்: மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு.

உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக்கொள்வது சிறந்த அறிவு; முன்னே மகிழ்ந்து விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாதது அறிவு. 425
 

6. எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு.

உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ, உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும். 426
 

7. அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதுஅறி கல்லா தவர்.

அறிவுடையவர் எதிர்காலத்தில் நிகழப்போவதை முன்னே எண்ணி அறியவல்லார்; அறிவில்லாதவர் அதனை அறிய முடியாதவர். 427
 

8. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை: அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.

அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்; அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடைவரின் தொழிலாகும். 428
 

9. எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்.

வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுஙகும்படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை. 429
 

10. அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.

அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர்; அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர். 430