பக்கம் எண் :

45

45. பெரியாரைத் துணைக்கோடல்
 

1. அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல்.

அறம் உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பைக், கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.441
 

2. உற்றநோய் நீக்கி உறாஅமை முன்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.

வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும். 442
 

3. அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

பெரியாரைப் போற்றித் தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல் பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும். 443
 

4. தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை.

தம்மை விட, ( அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தாராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.444
 

5. சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.

தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரை ஆராய்ந்து நட்புக் கொள்ள வேண்டும். 445
 

6. தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்.

தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளவனாய் நடக்கவல்ல ஒருவனுக்கு அவனுடைய பகைவர் செய்யக்கூடிய தீங்கு ஒன்றும் இல்லை. 446
 

7. இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்?

கடிந்து அறிவுரை கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரைக் கெடுக்கும் ஆற்றல் உடையவர் யார் இருக்கின்றனர்? 447
 

8. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும்.

கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத காவலற்ற அரசன் தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான். 448
 

9. முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்புஇலார்க்கு இல்லை நிலை.

முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை; அது போல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை. 449
 

10. பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.

நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும். 450