பக்கம் எண் :

46

46. சிற்றினஞ் சேராமை
 

1. சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும்; சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும். 451
 

2. நிலத்துஇயல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்துஇயல்பது ஆகும் அறிவு.

சேர்ந்த நிலத்தின் இயல்பால் நீர் வேறுபட்டு அந்நிலத்தின் தன்மையுடையதாகும்; அது போல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும் 452
 

3. மனத்தான்ஆம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல்.

மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும்; இப்படிப்பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல் சேர்ந்த இனத்தால் ஏற்படும். 453
 

4. மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துஉள தாகும் அறிவு.

ஒருவனுக்குச் சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக்காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.454
 

5. மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனம்தூய்மை தூவா வரும்.

மனத்தின் தூய்மை, செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்படும். 455
 

6. மனம்தூயார்க்கு எச்சம்நன் றாகும் இனம்தூயார்க்கு
இல்லைநன்று ஆகா வினை.

மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு அவர்க்குப்பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும். இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை. 456
 

7. மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.

மனத்தின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும்; இனத்தின் நன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும். 457
 

8. மனநலம் நன்குஉடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து.

மனத்தின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமைவதாகும். 458
 

9. மனநலத்தின் ஆகும் மறுமை:மற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.

மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும்; அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும். 459
 

10. நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை: தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.

நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை; தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை. 460