பக்கம் எண் :

47

47. தெரிந்து செயல்வகை
 

1. அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.

(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும், அழிந்தபின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும். 461
 

2. தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.

ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப் பார்த்துச் செய்கின்றவர்க்கு அரிய பொருள் ஒன்றும் இல்லை. 462
 

3. ஆக்கங் கருதி முதல்இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.

பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது உள்ள முதலை இழந்துவிடக் காரணமான செயலை அறிவுடையவர் மேற்கொள்ளமாட்டார். 463
 

4. தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவுஎன்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.

இழிவு தருவதாகிய குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் ( இன்ன ஊதியம் பயக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார். 464
 

5. வகையறச் சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோர் ஆறு.

செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத் தொடங்குதல் பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும். 465
 

6. செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.

ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான்; செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதனாலும் கெடுவான். 466
 

7. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும். துணிந்தபின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும். 467
 

8. ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.

தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று (அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகி விடும். 468
 

9. நன்றுஆற்ற லுள்ளும் தவறுஉண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை.

அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவர்க்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால் நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். 469
 

10. எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு.

தம் நிலைமையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக் கொள்ளாது. ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.. 470