பக்கம் எண் :

48

48. வலியறிதல்
 

1. வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

செயலின் வலிமையும், தன் வலிமையும், பகைவனுடைய வலிமையும், இருவர்க்கும் துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செய்யவேண்டும். 471
 

2. ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.

தனக்குப் பொருந்தும் செயலையும், அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை. 472
 

3. உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.

தம்முடைய வலிமை இவ்வளவு என்று அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.473
 

4. அமைந்தாங்கு ஒழுகான் அளவுஅறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

மற்றவர்களோடு ஒத்து நடக்காமல். தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான். 474
 

5. பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.

மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், அந்தப் பண்டமும் (அளவோடு ஏற்றாமல்) அளவுகடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு முறியும். 475
 

6. நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின்
உயிர்க்குஇறுதி யாகி விடும்.

ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து மேலும் ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக நேர்ந்துவிடும் 476
 

7. ஆற்றின் அளவறிந்து ஈக: அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி.

தக்க வழியில் பிறர்க்குக் கொடுக்கும் அளவு அறிந்து கொடுக்கவேண்டும்; அதுவே பொருளைப் போற்றி வாழும் வழியாகும். 477
 

8. ஆகுஆறு அளவுஇட்டிது ஆயினும் கேடுஇல்லை
போகுஆறு அகலாக் கடை.

பொருள் வரும் வழி (வருவாய்) சிறியதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை. 478
 

9. அளவுஅறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.

பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து கெட்டுவிடும். 479
 

10. உளவரை தூக்காத ஒப்புரவு ஆண்மை
வளவரை வல்லைக் கெடும்.

தனக்குப் பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும். 480