பக்கம் எண் :

49

49. காலமறிதல்
 

1. பகல்வெல்லும் கூகையைக் காக்கை: இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும்; அதுபோல் பகையை வெல்லக் கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும் 481
 

2. பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு.

காலத்தோடு பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் (நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும். 482
 

3. அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்?

(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால், அரிய செயல்கள் என்பவை உண்டோ? 483
 

4. ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்.

(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும். 484
 

5. காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.

உலகத்தைக் கொள்ளக் கருதுகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக் கொண்டு பொறுத்திருப்பர். 485
 

6. ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து.

ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல், போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்காகப் பின்னே கால்வாங்குதலைப் போன்றது. 486
 

7. பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

அறிவுடையவர், (பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார்;(வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வர். 487
 

8. செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.

பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்ல வேண்டும்; அப் பகைவர்க்கு முடிவுகாலம் வந்தபோது அவருடைய தலைகீழே விழும். 488
 

9. எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்.

கிடைத்தற்கரிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அப்போதே செய்தற்கரிய செயல்களைச் செய்யவேண்டும். 489
 

10. கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்
குத்துஒக்க சீர்த்த இடத்து.

பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப்போல் அமைதியா இருக்கவேண்டும்; காலம் வாய்த்தபோது அதன் குத்துப் போல் தவறாமல் செய்து முடிக்கவேண்டும். 490