1. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்அல் லது. | | முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக் கூடாது; பகைவரை இகழவும் கூடாது.
| 491 | | |
2. முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்துஆம் ஆக்கம் பலவுந் தரும். | | மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பலவகைப் பயன்களையும் கொடுக்கும்.
| 492 | | |
3. ஆற்றாரும் ஆற்றி அடுப இடன்அறிந்து போற்றார்கண் போற்றிச் செயின். | | தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக்கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவரும் வலிமை உடையவராய் வெல்வர்.
| 493 | | |
4. எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன்அறிந்து துன்னியார் துன்னிச் செயின். | | தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலை நெருங்கிச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.
| 494 | | |
5. நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற. | | ஆழமுள்ள நீரில் முதலை மற்ற உயிர்களை வெல்லும்; ஆனால் நீரிலிருந்து நீங்கி வந்தால் அந்த முதலையையும் மற்ற உயிர்கள் வென்று விடும்.
| 495 | | |
6. கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து. | | வலிய சக்கரங்களையுடைய பெரிய தேர்கள் கடலில் ஓடமுடியாது; கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது.
| 496 | | |
7. அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தாற் செயின். | | (செய்யும் வழிவகைகளைக்) குறைவில்லாமல் எண்ணித் தக்க இடத்தில் பொருந்திச் செய்தால், அஞ்சாமை அல்லாமல் வேறு துணை வேண்டியதில்லை.
| 497 | | |
8. சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும். | | சிறிய படை உடையவனுக்குத் தக்கதாக உள்ள இடத்தில் பொருந்தி நின்றால், பெரிய படை உடையவன் தன் ஊக்கம் அழிவான்.
| 498 | | |
9. சிறைநலனும் சீரும் இலர்எனினும் மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. | | அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது.
| 499 | | |
10. கால்ஆழ் களரின் நரிஅடும் கண்அஞ்சா வேலாள் முகத்த களிறு. | | வேல் ஏந்திய வீரரைக் கோத்தெடுத்த கொம்பு உடைய அஞ்சாத யானையையும், கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்டபோது நரிகள் கொன்றுவிடும்.
| 500 | | |
|
|