பக்கம் எண் :

51

51. தெரிந்து தெளிதல்
 

1. அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்
திறம்தெரிந்து தேறப் படும்.

அறம், பொருள், இன்பம், உயிர்க்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.501
 

2. குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாண்உடையான் கட்டே தெளிவு.

நல்ல குடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியான செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும். 502
 

3. அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.

அரிய நூல்களைக் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்து பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும். 503
 

4. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திருப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும். 504
 

5. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம்
கருமமே கட்டளைக் கல்.

(மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரை கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும். 505
 

6. அற்றாரைத் தேறுதல் ஓம்புக: மற்றுஅவர்
பற்றிலர் நாணார் பழி.

சுற்றத்தாரின் தொடர்பு அற்றவரை நம்பித் தெளியக் கூடாது; அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாணமாட்டார். 506
 

7. காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும்.

அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித் தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையையும் கொடுக்கும். 507
 

8. தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.

மற்றவனைப் பற்றி ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றியவர்க்கும் தீராத துன்பத்தைக் கொடுக்கும். 508
 

9. தேறற்க யாரையும் தேராது: தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.

யாரையும் ஆராயமல் தெளியக்கூடாது; நன்றாக ஆராய்ந்த பிறகு, அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும். 509
 

10. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். 510