1. நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். | | நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.
| 511 | | |
2. வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை. | | பொருள் வரும் வழிகளைப் பெருகச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்யவேண்டும்.
| 512 | | |
3. அன்புஅறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு. | | அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.
| 513 | | |
4. எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறுஆகும் மாந்தர் பலர். | | எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும் (செயலை மேற்கொண்டு செய்யும்போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் உண்டு.
| 514 | | |
5. அறிந்துஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தான் என்று ஏவற்பாற் றன்று. | | (செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத் தாங்கிச் செய்துமுடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்று கருதி ஒரு செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.
| 515 | | |
6. செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல். | | செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்க காலத்தோடு பொருந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.
| 516 | | |
7. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து அதனை அவன்கண் விடல். | | இந்தத் தொழிலை இக் கருவியால் இன்னவன் முடிப்பான் என்று ஆராய்ந்த பிறகு அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
| 517 | | |
8. வினைக்குஉரிமை நாடிய பின்றை அவனை அதற்குஉரிய னாகச் செயல். | | ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனை அத் தொழிலுக்கு உரியவனாகும்படி உயர்த்தவேண்டும்.
| 518 | | |
9. வினைக்கண் வினையுடையான் கேண்மைவேறு ஆக நினைப்பானை நீங்கும் திரு. | | மேற்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.
| 519 | | |
10. நாள்தோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடாது உலகு. | | தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது; ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.
| 520 | | |
|
|