பக்கம் எண் :

53

53. சுற்றந்தழால்
 

1. பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.

ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த பழைய உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு. 521
 

2. விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்புஅறா
ஆக்கம் பலவும் தரும்.

அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும். 522
 

3. அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடுஇன்றி நீர்நிறைந் தற்று.

சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது. 523
 

4. சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.

சுற்றத்தாரால் சுற்றப்படும்படியாக அவர்களைத் தழுவி அன்பாக வாழ்தல் ஒருவன் செல்வத்தைப் பெற்றதனால் பெற்ற பயனாகும்.524
 

5. கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.

பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்ய வல்லவனானால், ஒருவன் தொடர்ந்த பல சுற்றத்தால் சூழப்படுவான். 525
 

6. பெரும்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குஉடையார் மாநிலத்து இல்.

பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப்போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை. 526
 

7. காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.

காக்கை (தனக்குக் கிடைத்ததை) மறைத்துவைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும்; ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு. 527
 

8. பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.

அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பிச் சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர். 528
 

9. தமராகித் தன்துறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.

முன் சுற்றத்தாராக இருந்து பின் ஒரு காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும். 529
 

10. உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்துஇருந்து எண்ணிக் கொளல்.

தன்னிடமிருந்து பிரிந்து சென்று ஒரு காரணம்பற்றித் திரும்பி வந்தவனை, அரசன், அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ளவேண்டும். 530