1. இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு. | | பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும்போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.
| 531 | | |
2. பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. | | நாள்தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வதுபோல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதி கொன்றுவிடும்.
| 532 | | |
3. பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அதுஉலகத்து எப்பால்நூ லோர்க்கும் துணிவு. | | மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை; அஃது உலகத்தில் எப்படிப்பட்ட நூலோர்க்கும் ஒப்பமுடிந்த முடிபாகும்.
| 533 | | |
4. அச்ச முடையார்க்கு அரண்இல்லை ஆங்கில்லை பொச்சாப்பு உடையார்க்கு நன்கு. | | உள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்தும் பயன் இல்லை; அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை. | 534 | | |
5. முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்ஊறு இரங்கி விடும். | | வரும் இடையூறுகளை முன்னே அறிந்து காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைந்து இரங்குவான்.
| 535 | | |
6. இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுஒப்பது இல். | | யாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காத தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.
| 536 | | |
7. அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின். | | மறவாமை என்னும் கருவி்கொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.
| 537 | | |
8. புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். | | சான்றோர் புகழ்ந்து சொல்லிய செயல்களைப் போற்றிச் செய்ய வேண்டும்; அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவருக்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.
| 538 | | |
9. இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. | | தாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்கவேண்டும்.
| 539 | | |
10. உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான் உள்ளியது உள்ளப் பெறின். | | ஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி, (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.
| 540 | | |
|
|