1. ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. | | யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமை பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும். | 541 | | |
2. வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி. | | உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நோக்கி வாழ்கின்றன. அது போல் குடிகள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
| 542 | | |
3. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். | | அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.
| 543 | | |
4. குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு. | | குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப் பொருந்தி உலகம் நிலைபெறும்.
| 544 | | |
5. இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு. | | நீதிமுறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒரு சேர ஏற்படுவனவாகும்.
| 545 | | |
6. வேல்அன்று வென்றி தருவது: மன்னவன் கோல்அதூஉம் கோடாது எனின். | | ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று; அரசனுடைய செங்கோலே ஆகும்; அச்செங்கோலும் கோணாதிருக்குமாயின்.
| 546 | | |
7. இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின். | | உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான்; நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.
| 547 | | |
8. எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும். | | எளிய செல்வி உடையவனாய் ஆராய்ந்து நீதிமுறை செய்யாத அரசன் தாழ்ந்த நிலையில் நின்று ( பகைவரில்லாமலும்) தானே கெடுவான்.
| 548 | | |
9. குடிபுறங் காத்துஓம்பிக் குற்றம் கடிதல் வடுஅன்று வேந்தன் தொழில். | | குடிகளைப் பிறர் வருத்தாமல் காத்துத், தானும் வருத்தாமல் காப்பாற்றி, அவர்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில்; பழி அன்று. | 549 | | |
10. கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர். | | கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைக் களைவதற்கு நிகரான செயலாகும்.
| 550 | | |
|
|