பக்கம் எண் :

56

56. கொடுங்கோன்மை
 

1. கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்துஒழுகும் வேந்து.

குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரைவிடக் கொடியவன். 551
 

2. வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.

ஆட்சிக்குரிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல், போகும் வழியில் தனியே வேல் ஏந்தி நின்ற கள்வன் 'கொடு' என்று கேட்பதைப் போன்றது. 552
 

3. நாள்தோறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தோறும் நாடு கெடும்.

நாள்தோறும தன் ஆட்சியில் விளையும் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறை செய்யாத அரசன், நாள்தோறும் ( மெல்ல மெல்லத் ) தன் நாட்டை இழந்து வருவான். 553
 

4. கூழும் குடியும் ஒருங்குஇழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.

( ஆட்சிமுறை கெட்டுக் ) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான். 554
 

5. அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

( முறை செய்யாதவனுடைய ) செல்வத்தைத் தேய்த்து அழிக்கவல்ல படை, அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ? 555
 

6. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதுஇன்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி.

அரசர்க்குக் புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும். அஃது இல்லையானால் அரசர்க்குப் புகழ் நிலைபெறாமல் போகும். 556
 

7. துளியின்மை ஞாலத்திற்கு எற்றுஅற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.

மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி. 557
 

8. இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோல்கீழ்ப் படின்.

முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப்பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும் 558
 

9. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.

அரசன் முறைதவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும். 559
 

10. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.

நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால் அந்நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும்; அந்தணரும் அறநூல்களை மறப்பர். 560