பக்கம் எண் :

57

57. வெருவந்த செய்யாமை
 

1. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

செய்த குற்றத்தைத் தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாதபடி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான். 561
 

2. கடிதுஓச்சி மெல்ல எறிக நெடிதுஆக்கம்
நீங்காமை வேண்டு பவர்.

ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும்போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி, அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.562
 

3. வெருவந்த செய்துஒழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

குடிகள் அஞ்சும்படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான். 563
 

4. இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.

'நம் அரசன் கடுமையானவன்' என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ் சொல்லை உடைய வேந்தன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான். 564
 

5. அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.

எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது. 565
 

6. கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடுஇன்றி ஆங்கே கெடும்.

கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீட்டித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும். 566
 

7. கடுமொழியும் கைஇகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.

கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்குக் காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும். 567
 

8. இனத்ததுஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச்
சீறின் சிறுகும் திரு.

அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும். 568
 

9. செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.

முன்னமே தக்கவாறு அரண் செய்துகொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான். 569
 

10. கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல்: அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.

கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக்கொள்ளும்; அது தவிர நிலத்திற்குச் சுமை வேறு இல்லை. 570