பக்கம் எண் :

59

59. ஒற்றாடல்
 

1. ஒற்றும் உரைசான்ற நூலும் இவைஇரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.

ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளிய வேண்டும். 581
 

2. எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.

எல்லாரிடத்திலும்நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும்(ஒற்றரைக்கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும். 582
 

3. ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றம் கொளக்கிடந்தது இல்.

ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றி பெறத்தக்க வழிவேறு இல்லை. 583
 

4. வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.

தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்று கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும். 584
 

5. கடாஅ உருவொடு கண்அஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.

ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண்பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனத்திலுள்ளதை வெளிப்படுத்தாமல், இருக்கவல்லவனே ஒற்றன் ஆவன். 585
 

6. துறந்தார் படிவத்தர் ஆகி இறந்துஆராய்ந்து
என்செயினும் சோர்வுஇலது ஒற்று.

துறந்தவரின் வடிவத்தை உடையவராய், அரிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து, (ஐயுற்றவர்) என்ன செய்தாலும் சோர்ந்துவிடாதவரே ஒற்றர் ஆவார். 586
 

7. மறைந்தவை கேட்கவற்று ஆகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.

மறைந்த செய்திகளையும் கேட்டறியவல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணியவல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான். 587
 

8. ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்த செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டுவரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்று கொள்ள வேண்டும். 588
 

9. ஒற்றுஒற்று உணராமை ஆள்க உடன்மூவர்
சொல்தொக்க தேறப் படும்.

ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆளவேண்டும்; அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும்.589
 

10. சிறப்புஅறிய ஒற்றின்கண் செய்யற்க: செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.

ஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது; செய்தால் மறைப்பொருளைத் தானே வெளிப்படுத்தியவன் ஆவான். 590