பக்கம் எண் :

இரவென்னு மேமாப்பி றோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்

 

இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி-வறுமை யென்னுங் கடலைக் கடப்பதற்கு ஒருவன் ஏறிய இரப்பு என்னும் பாதுகாப்பில்லாத தோணி; கரவுஎன்னும் பார்த்தாக்கப் பக்குவிடும்-வழியிலுள்ள கரத்தல் என்னும் பாறையால் தாக்கப்படும்போது பிளந்துபோம்.

உழைப்பாற் கடக்கவேண்டிய கடலை இரப்பாற் கடக்கத் தொடங்கியவன், சேதமின்றித் தன்தோணியைச் செலுத்த முடியாமையால் , 'ஏமாப்பி றோணி' என்றார். இது வறுமையென்னுங் கடலைப்பற்றிக் கூறாது அக்கடலிலுள்ள தோணியையும் பாறையையுமே கூறியதனால் , சினையுருவகம்.