(பாங்கற் கூட்டத்துச் சென்று சார்வான் கூறியது .) குவளை - குவளைப் பூக்கள் தாம் ; காணின் - காணுந் தொழிலையுடையனவாயின் ; மாண் இழை கண் ஒவ்வேம் என்று - வினைத்திறத்தால் மாட்சிமைப்பட்ட அணிகலன் களையுடைய இவள் கண்களை யாம் ஒவ்வேமென்று கருதி ; கவிழ்ந்து நிலன் நோக்கும் - அந்நாணத்தினாற் குனிந்து நிலத்தை நோக்கும் . பண்பாலன்றித் தொழிலாலும் ஒவ்வாமையாற் ' காணின் ' என்றும் . கண்டால் நாணும் என்பது தோன்றக் ' கவிழ்ந்து ' என்றும் , கூறினான் . காட்சியும் நாணமுமின்மையாற் செம்மாந்து மேல் நோக்கின என்பது தற்குறிப்பேற்றம் . ' மாணிழை ' அன்மொழித் தொகை .
|