(இரவுக் குறிக்கண் நிலாவைக் கண்டு சொல்லியது ) மீன் - விண்மீன்கள் ; மதியும் மடந்தை முகனும் அறியா - தம் தலைமைச் சுடராகிய மதிக்கும் எம் காதலி முகத்திற்கும் வேறுபாடு பெரிதாயிருந்தும் அதனை அறிய மாட்டாது ; பதியின் கலங்கிய - மயங்கித் தம் நிலையினின்றும் பெயர்ந்து அங்குமிங்குந் திரிகின்றன . இரவுக்குறியாவது , பாங்கியிற் கூட்டக் காலத்தில் தலைமகனுந் தலைமகளும் இரவிற் கூடுதற்குக் குறித்த இடம் . ஒரிடத்து நிலைத்து நில்லாது எப்போதும் இயங்குதல்பற்றிப் ' பதியிற் கலங்கிய ' என்றான் . இதற்கு மதிமுக வேறுபாடறியாமைக் கரணியங் காட்டியது தற்குறிப் பேற்றம் . இக்குறட்கு "இனி இரண்டனையும் பதியிற்கலங்காத மீன்களறியு மல்லது கலங்கின மீன்களறியாவென்றுரைப்பினு மமையும் ". என்று பரிமேலழகர் கூறிய மற்றோருரை அத்துணைச் சிறந்ததன்று .
|