பக்கம் எண் :

வாழ்த லுயிர்க்கன்ன ளாயிழை சாத
லதற்கன்ன ணீங்கு மிடத்து.

 

( பகற்குறிக்கட் புணர்ந்து நீங்குவான் சொல்வியது. )

ஆயிழை உயிர்க்கு வாழ்தல் அன்னள் - ஆய்ந்தெடுத்த அணிகலன்களை யுடையாள் என்னோடு கூடுமிடத்து எனக்கு உயிருக்கு உடம்போடு கூடி வாழ்தல் போலும் ; நீங்கு மிடத்து அதற்குச் சாதல் அன்னள் - என்னை விட்டுப் பிரியுமிடத்து அதற்கு அதினின்று நீங்கிச் சாதல் போலும் .

வாழ்தலின் இனியதும் சாதலின் இன்னாததும் இல்லையாதலின் , கூடுதல் வாழ்தலும் நீங்குதல் சாதலும் போல்வன என்றான் . கூடுமிடத்து என்பது எனக்கு என்பதும் அவாய்நிலையான் வந்தன , ' ஆயிழை ' அன்மொழித்தொகை .