பக்கம் எண் :

இன்க ணுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்க ணுடைத்தாற் புணர்வு

 

(தலைமகனது குறிப்பாற் பிரிவுணர்ந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது)

அவர் பார்வல் இன்கண் உடைத்து - களவொழுக்கக் காலத்தில் நம் காதலர் தழையுங் கண்ணியுங் கொண்டு வந்து நம்மை குறையிரந்த பொழுது , அவர் பார்வை கூடப் புணர்ச்சி குறித்தமையால் நமக்கு இன்பந் தருவதாயிருந்தது; புணர்வு பிரிவு அஞ்சும் புன்கண் உடைத்து-ஆனால் இன்று அப்புணர்ச்சியே நிகழ்ந்து வரவும், அது பிரிவர் என்னும் அச்சத்தைத் தருவதாகவுள்ளது. என்னே காமவின்பத்தின் நிலைமாற்றம்!.

'பார்வல்' என்றதனால் பாங்கியிற் கூட்டத்திற்குமுன்பு இரந்து பின்னின்ற நிலையென்பது பெறப்பட்டது. புன்கண் துன்பம். அது இங்கு அதனால் விளையும் அச்சத்தைக் குறித்தது, அச்சத்தை யுடைத்தாதலாவது முன்னினுஞ் சிறப்பாக அன்பு பாராட்டிப் பிரிவுக் குறிப்பைக் காட்டுதல். அது.

"முள்ளுறழ் முளையெயிற் றமிழ்தூறுந் தீ நீரைக்
கள்ளினு மகிழ்செய்யு மெனவுரைத்து மமையாரென்
னொள்ளிழை திருத்தும்."


என்றாற் போல்வது (கலித் 3) 'ஆல்' அசைநிலை.