(இதுவுமது) துறைவன் துறந்தமை-தலைவன் என்னைவிட்டுப் பிரிந்தமையை; முன்கை இறை இறவா நின்றவளை தூற்றாகொல்-அவனுணர்த்தாமல் தாமே யுணர்ந்து என் முன்கையின் வளைவினின்று கழன்று நின்ற வளையல்களே எனக்கு அறிவிக்க வேண்டுமோ? பிரிந்து செல்ல முன்னமே தீர்மானித்து விட்டமையால் 'துறந்தமை' யென்றும், குறிப்பாலறிந்து வாடிய வாட்டத்தால் வளைகழன்றமையால் 'இறவா நின்ற வளை' யென்றும். பலரறிய வெளிப்படையாய் நிகழ்ந்தமையால் 'தூற்றாகொல்' என்றுங் கூறினாள். செலவழுங்குவித்து எனக்குத் துணையாயிராது. செலவு நிகழ்ந்ததைக் கூறித் துன்பஞ் செய்தாய் என்று புலந்து கூறியவாறு 'வளை' பால்பகா அஃறிணைப்பெயர்.
|