பக்கம் எண் :

தொடிற்சுடி னல்லது காமநோய் போல
விடிற்சுட லாற்றுமோ தீ.

 

(காமம் தீபோன்று தான் நின்ற விடத்தைச் சுடுமாதலால் நீ ஆற்றல் வேண்டு மென்ற தோழிக்குச் சொல்லியது.)

தீத் தொடிற் சுடின் அல்லது - தீத் தன்னைத் தொட்டாற் சுடுமே யல்லது; காம நோய் போல விடின் சுடல் ஆற்றுமோ - காமநோய் போலத் தன்னை விட்டு நீங்கினுஞ் சுடவல்லதோ? இல்லையே!

பரிமேலழகர் தீத் தொடிற் சுடிற் சுடலல்லது எனச் சுடல் என்பதை முன்னுங் கூட்டி , தீத் தன்னைத் தொட்டாற் சுடுமாயிற் சுடுதலல்லது என்று உரையும் , சுடுமாயி னென்பது மந்திர மருந்துகளாற் றம்பிக்கப்படாதாயி னென்றவாறு. காமத்திற் கதுவு மில்லை யென்பாள் வாளா 'சுடல்' என்றாள் . என்று சிறப்புங் கூறினார். தீவலிகட்டல் செயற்கையாதலானும் , காம நோயையும் ஒகத்துயிலால் (யோகநித்திரையால்) கட்டலாமாதலானும், அது அத்துணைச் சிறந்ததன்று. விடுதல் கருதாமை. தீயினுங் கொடியதை எங்ஙனம் ஆற்றவொண்ணு மென்பதாம்.