(பிரிவாற்றியிருக்குந் தலைவியரும் பலருளர் , நீ அது செய்கின்றிலையென்ற தோழிக்குச் சொல்லியது.) ( ஆம், நீ சொல்லுவ துண்மைதான்.) அரிது ஆற்றி - பிரிவுணர்த்திய போது அதற்குடம்பட்டு; அல்லல் நோய் நீக்கி - பிரியுங்கால் நிகழும் துன்ப நோயைப் பொருட்படுத்தாது; பிரிவு ஆற்றி - பிரிவு நிகழ்ந்தால் அப்பிரிவையும் பொறுத்துக் கொண்டு; பின் இருந்து வாழ்வார் பலர் - அதன் பின்னும் உயிர் வாழும் மகளிர் உலகத்துப் பலராவர்! முன்னும் பன்மடங்கு சிறப்பாகத் தலைமகன் பேரன்பு செய்யும் நிலைமைக்கண் , அதையிழந்து துன்புறுதற் குடம்படுதல் அரிய தொன்றாகலின் , 'அரிதாற்றி' என்றும் ; செல்லும் வழியிலும் நாட்டிலும் தலைவருக்கு என்ன தீங்குநேருமோ வென்றும் , அவர் வருமளவும் யாம் ஆற்றியிருப்ப தெவ்வாறென்றும் , அவ்வரவுதான் என்று நிகழுமோ வென்றும் மனத்திலெழுங் கவலை நீங்காதாகலின் அல்லனோய் நீக்கி' யென்றும் ; பிரிந்தபின் வருமளவும் உள்ளத்து நிகழுங் காமநோயையும் , அதை வளர்க்கும் யாழிசை வெண்ணிலா தென்றல் வீச்சு முதலியவற்றையும் , தாங்குதல் அரிதாகலின் ' பிரிவாற்றி' யென்றும் ; தம் காதலரை யின்றியமையா மகளிருள் , இவற்றையெல்லாம் பொறுத்துக்கொண்டு பின்னுமிருந்து உயிர்வாழ்வார் ஒருவருமிரார் என்பது தோன்றிப் பகடிக் குறிப்பாகப் பின்னிருந்து வாழ்வார் பலர் என்றுங் கூறினாள் . ' ஆற்றி,' 'நீக்கி,' ' ஆற்றி' என்னும் எச்சங்கள் , துன்பத் தொடர் நீட்சியையும் அதன் கடுமையையும் உணர்த்தி நின்றன. சிறப்பும்மையும் எச்சவும்மையும் செய்யுள் நடையால் தொக்கன.
|