(காமநோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்குந் தகாதென்ற தோழிக்குச் சொல்லியது.) நோயை யான் மறைப்பேன் - இக்காம நோயைப் பிறர் அறியாவாறு யான் மறைப்பேன்; இஃதோ இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும் - ஆயின் , இதுவோ நான் மறைக்க மறைக்க என் நாண்வரை நில்லாது இறைப்பவர் இறைக்க இறைக்க வூறும் ஊற்று நீர்போல மிகுந்து வெளிப்படும். இனி அதற்குத் தக்கது நீ செய்தல் வேண்டும் என்பதாம். 'இஃதோ' என்பது சுட்டுப்பெயர் ஈது திரிந்தது அன்று. மறைத்து என்ன பயன் என்பது பட நின்றமையின் 'மன்' ஒழியிசை. 'இஃதோர் நோயை' என்னும் பாடம் சரியானதன்று.
|