(நின்கண்களின் பேரழகு கெடுகின்றமையின் அழத்தகாதென்ற தோழிக்குச் சொல்லியது.) உள்ளம் போன்று உள்வழிச் செல்கிற்பின் - என் அகக்கண் போன்றே காதலருள்ள நாட்டிற்குக் கடுகிச் செல்ல வல்லனவாயின்; என் கண் வெள்ளநீர் நீந்தல- என் புறக்கண்கள் இங்ஙனம் வெள்ளம்போலக் கண்ணீர் வடித்து அதில் நீந்தா. அகக் கண்ணிற்குச் செலவு உள்ளுதலே யாதலின் 'உள்ளம்' என்றும், புறக்கண்கள் அங்ஙனஞ் செல்ல வியலாமையின் 'செல்கிற்பின்' என்றும், கூறினாள். 'மன்னோ' பிற்காலத்து ஈரசைநிலைகளும் (மன்,ஓ) முற்காலத்து ஆடூஉ முன்னிலையும் (அரசே!) ஆகும். அது (செல்வது) மாட்டாமையின், இனி அவற்றிற்கு நீந்துதலேயுள்ள தென்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது, என்பர் பரிமேலழகர். 'கில்' ஆற்றலுணர்த்தும் இடைநிலை. இக்குறளால் வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.
|