(இதுவுமது) உண்கண்-என் மையுண்ட கண்கள்; உயல் ஆற்றா உய்வு இல்நோய் என்கண் நிறுத்து-நான் தப்பமுடியாமைக் கேதுவான ஒழியாத காமநோயை என்னிடம் நிறுத்திவிட்டு; பெயல் ஆற்றாநீர் உலந்த-தாமும் தொடாந்து அழமுடியாவண்ணம் நீர் வற்றிவிட்டன. உய்வில் நோய் நிறுத்தலாவது, பிரிதலும் பின் விரைந்து கூடாமையு முடையாரைக் காட்டி, அதனானுண்டாகும் ஆற்றாமை நோயை நீடுநிற்கச்செய்தல். என்னை நெடிது வருந்தச்செய்த தீவினையால் தாமும் வற்றி வறண்டுபோயின என்பதாம்.
|