பக்கம் எண் :

நனவினா னல்காரை நோவர் கனவினாற்
காதலர்க் காணா தவர்.

 

(இதுவுமது)

கனவினாற் காதலர்க் காணாதவர் - தமக்கொரு காதலரின்மையால் அவரைக் கனவிற் கண்டறியாத மகளிர்; நனவினான் நல்காரை நோவர் - நனவின்கண் தாம் அறியவந்து கூடியின்பந்தராத நம் காதலரை அன்பிலரென்று பழித்து நொந்து கொள்வர்.

இயற்பழித்தது பொறாது புலக்கின்றா ளாதலின், தோழியை அயன்மை தோன்றக் கூறினாள். இங்கும் மூன்றாம் வேற்றுமை யுருபுகள் மேற்கூறியனவே.