(இதுவுமது) நெஞ்சே-என் உள்ளமே!; துனிசெய்து மற்றுத் துவ்வாய்-கணவரைக் கண்டால் அவர் தவறு நோக்கி முன்பு ஊடி அதை அளவறிந்து நீக்கி அதன் பின்பு கூடக் கருதாய் . கண்டவுடன் இன்பம் நுகரக் கருதுகின்றாய் ; இனி அன்ன நின்னொடு யார் சூழ்வார்-ஆதலால்,இனி அத்தகைய செய்திகளை உன்னோடு கூடி யார் எண்ணுவார்? நான் இனி எண்ணேன். முன்னெல்லாம் புலப்பதாக விருந்து இன்று புணர்ச்சி விதும்புதலின் இவ்வாறு கூறினாள் . ' அன்ன' என்றது ஊடும் அல்லது புலக்குந் திறங்களை , ' காண்' உரையசை 'மற்று' பின்மைப் பொருளது .
|