(அப்புலவி இனி எதனால் நீங்குமென்ற தோழிக்குச் சொல்லியது.) புல்லி விடாப் புலவியுள் - காதலரைத் தழுவிக் கொண்டு பின் விடாமைக் கேதுவாகிய அப்புலவிக் கண்ணே; என் உள்ளம் உடைக்கும் படை - அதை மேற்கொண்ட என் உள்ளத்தைத் தகர்க்கும் படைக்கலம்; தோன்றும் - உண்டாகும். புலவி யென்றது அவ்வினை நிகழ்ச்சியை, படைக்கலம் என்றது காதலரின் பணிமொழியை, புலவி நீங்குந் திறங் கூறியவாறு. விடா அ, இசைநிறை யளபெடை.
|