பக்கம் எண் :

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.

 

புலம் வென்ற புன்மை இல் காட்சியவர் - ஐம்புலன்களையும் அடக்கிய குற்றமற்ற அறிவினையுடையோர்; இலம் என்று வெஃகுதல் செய்யார் - யாம் பொருளிலேம் என்று எண்ணி அவ்வின்மையைத் தீர்த்தற்பொருட்டுப் பிறர்பொருளை விரும்புதல் செய்யார்.

புலம் வெல்லுதல் தீய வழியில் இன்புறாது மனத்தைத்தடுத்தல். 'புன்மையில் காட்சி' ஐயந்திரிபறப் பொருள்களை யறிதல். அதாவது, பிறர்பொருள் மீது தமக்குரிமையில்லையென்றும், அதைக் கவரின் அது நிலையாதாகையாற் பின்னும் வறுமையுண்டாகுமென்றும் , ஆகவே , அக்கவர்வால் இருமையிலுந் துன்பமன்றி யின்பமில்லை யென்றும் , உணர்தல்.