புறங் கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் - ஒருவன் பிறனைக் காணாவிடத்துத் தீதாகக் கூறி அவனைக் கண்டவிடத்து நல்லவனாக நடித்து உயிர் வாழ்தலினும்; சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும் - அங்ஙனஞ் செய்யாது இறந்து போதல் அவனுக்கு அற நூல்கள் கூறும் ஆக்கத்தைத் தரும். இறந்தவழிப் புறங்கூறலின்மையால் ' அறங் கூறும் ஆக்கத்தரும்' என்றார். ஆக்கம் மறுமையிற் பெறும் நன்மை. ' அறம்' ஆகு பெயர். தரும் என்னும் சொல். "தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும் தன்மை முன்னிலை ஆயீ ரிடத்த". (512) என்னும் தொல்காப்பிய நூற்பாப்படி தன்மை முன்னிலையில் வராது படர்க்கையில் வந்ததினால், இடவழு வமைதியாம்.
|