பக்கம் எண் :

அறத்துப் பால்
இல்லறவியல்

அதிகாரம் 21. தீவினையச்சம்

அஃதாவது, இம்மையிலும் மறுமையிலும் துன்பம் விளைவிக்கும் தீவினைகட்கு அஞ்சி அவற்றைச் செய்யாதிருத்தல். பயனில் சொல்லையும் தீச்சொல் என விலக்கியமையால், தீவினை விலக்கப்பட்டமை சொல்லாமலே பெறப்படும். முக்கரணத்துட் சொல்லிற் கடுத்தது செயலாலாமதலால், இது பயனில சொல்லாமையின் பின் வைக்கப்பட்டது.

தீச்சொல்லினும் தீச்செயல் கொடியது என்னாது தீவினையச்சம் என்றார்.


 

தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செருக்கு.

 

தீவினை என்னும் செருக்கு-தீவினை என்று சொல்லப்படும் இறுமாப்பிற்கு; தீவினையார் அஞ்சார். தீவினை செய்து பழகிய தீயோர் அஞ்சார்; விழுமியார் அஞ்சுவர்-ஆயின் அதைச் செய்தறியாத சீரியோர் அஞ்சுவர்.

தீவினைக்குக் கரணியமான இறுமாப்பு தீவினை யென்னும் கருமியமாகச் சார்த்திக் கூறப்பட்டது. அஞ்சாமை மனச்சான்றின் மழுக்கத்தாலும் அச்சம் அதன் கூர்மையாலும் ஏற்படுவனவாம்.