பக்கம் எண் :

தீயவே தீய பயத்தலாற் றீயவை
தீயினு மஞ்சப் படும்.

 

தீய தீயவே பயத்தலால்-ஒருவன் தனக்கின்பங் கருதிச் செய்யும் தீவினைகள் இம்மையிலும் மறுமையிலும் துன்பங்களையே தருதலால்; தீயவை தீயினும் அஞ்சப்படும்-அத்தீவினைகள் தீயினும் மிகுதியாக அஞ்சப்படத்தக்கனவாம்.

தீயானது தொட்டவரைச் சுடினும் எரிப்பினும், சமைத்தலும் குளிர் போக்கலும் நோய் நீக்கலும் கொடுவிலங்கு விரட்டலுமாகிய நன்மைகளையுஞ் செய்தலாலும்; தீவினையானது செய்த காலத்தில் மட்டுமன்றிப் பின்பு வேறொரு காலத்திலும் வேறொரிடத்திலும் வேறோ ருடம்பிலுஞ் சென்று சுடுதலாலும், எவ்வகை நன்மையுஞ் செய்யாமையாலும்; 'தீயவை தீயினும் அஞ்சப்படும்' என்றார். தீவினை நன்மை செய்யாமை பற்றியே 'தீயவே' என்னும் பாடம் இங்குக் கொள்ளப்பட்டது.