செறுவார்க்கும் தீய செய்யா விடல்-தம்மைப் பகைப்பவர்க்குந் தீமையானவற்றைச் செய்யாது விடுதலை; அறிவினுள் எல்லாம் தலை என்ப-அறிவுச் செயல்களெல்லாவற்றுள்ளும் தலையாயதென்பர் அறிவுடையோர். நன்மைக்கு நன்மையும் தீமைக்குத் தீமையுஞ் செய்வதே மக்களியல்பாதலால், தீமைக்கு நன்மை செய்வதை அல்லது தீமை செய்யாமையைச் சிறந்த அறிவுச் செயலென்றார். உம்மை இழிவு சிறப்பு. 'செய்யா' ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். அறிவினால் ஒழுக்கம் பயனாதலின் ஒழுக்கம் அறிவெனப்பட்டது.
|