பக்கம் எண் :

மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம்
பெருந்தகை யான்கட் படின்.

 

செல்வம் பெருந்தகையான்கண் படின் - செல்வம் ஒப்புரவு செய்யும் பெருந்தகையாளனிடம் சேரின், மருந்து ஆகித் தப்பா மரத்து அற்று - அது வேர்முதல் கொழுந்துவரை எல்லாவுறுப்பும் பல்வேறு நோய்க்கு மருந்தாகித் தப்பாது பயனபடும் மரத்தையொக்கும்.

மரத்தை மருந்தென்றமையால் அதன் உறுப்புக்களெல்லாம் மருந்தாதல் அறியப்படும். சில மருந்துகள் சிலருடம்பிற்கு ஏற்காமையானும் சிறிது காலம் பொறுத்து ஆற்றல் கெடுதலானும், எல்லார்க்கும் என்றும் தப்பாது குணந்தரும் என்பதை யுணர்த்தத் ' தப்பா மரம் ' என்றார்.

மேற்கூறிய மூவேறுவமங்களும் ஊருணியென்பது எல்லார்க்கும் பயன்படும் செல்வத்தையும், பழுமரம் என்பது பலர்க்குப் பயன்படும் செல்வத்தையும் மருந்து மரம் என்பது சிலர்க்குப் பயன்படும் செல்வத்தையும் குறிக்குமென்று கொள்ள இடமுண்டு. இங்ஙனம் பயனளவில் வேறுபடுவது செல்வத்தின் அளவையும் ஒப்புரவாளரின் குறிக்கோளையும் பொறுத்ததாகும். ' ஆல் ' அசைநிலை.