வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை - பொருளில்லாதவரும் திரும்பிச் செய்ய இயலாதவருமான ஏழையர்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடுப்பதே ஈகை என்னும் அறச் செயலாம்; மற்று எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து - மற்றக் கைம்மாறு கருதிய கொடுப்பெல்லாம் அளவு குறித்துக் கடன் கொடுக்கும் தன்மையதாம். குறியெதிர்ப்பாவது அளவு குறித்துக் கொடுத்து அவ்வளவில் திரும்பப் பெறுங் கடன். நீரது என்பதில் அது என்பது முதனிலைப் பொருளீறு. "ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே".(928) என்னும் தொல்காப்பிய நெறிப்படி, ஈகை என்னும் சொல் சிறப்பாகத் தாழ்ந்தோர்க்கு ஈதலைக் குறிக்கும். |