பக்கம் எண் :

இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்
குலனுடையான் கண்ணே யுள.

 

இலன் என்னும் எவ்வம் உரையாமை - யான் ஏழையென்று இரப்போன் சொல்லும் இழிவுரையைத் தான் பிறனிடத்துச் சொல்லாமையும்; ஈதல் - அவ் விரப்போன் வேண்டியதொன்றை இல்லையென்னாது அவனுக்கு ஈதலும்; குலன் உடையான் கண்ணே உள - ஆகிய இரண்டும் உயர்குடிப் பிறந்தான் கண்ணே உள்ளன.

எவ்வம் துன்பம். அது இங்குத் துன்பந்தரும் இழிவுரையைக் குறித்தது.

இனி, ' இலனென்னு மெவ்வ முரையாமை யீதல்' என்னும் தொடருக்குப் பின்வருமாறும் உரைகள் கூறப் பெறும்.

(1) யான் பொருளில்லாதவன் என்று இரப்போன் தன் இளிவரவைச் சொல்லுமுன் அவன் குறிப்பறிந்து கொடுத்தல்.

(2) அவ்விழிவுரையைப் பின்னும் இன்னொருவனிடம் சென்று உரையா வண்ணம் அவ்விரப்போனுக்கு நிரம்பக் கொடுத்தல்.

(3) இல்லத்தான் என்னிடம் இப்பொழுது பொருளில்லையென்று ஈயாதார் சொல்லும் இழிவுரையைச் சொல்லாது கொடுத்தல்.

இம் மூவுரையும் எளிதாய்ப் பொருந்துவன. இனி, வலிந்து பொருந்தும் வேறுமூவுரையுமுள.அவை வருமாறு : -

(1) அவ்விரப்போனை ஒன்றுமில்லாதவனென்று பிறர் இழிந்துரையா வண்ணம் கொடுத்தல்.

(2) அவ்விரப்போனுக்கு மறுத்த இல்லறத்தான் அது பற்றிப்பின்பு வறியனானபின், தானும்

(3) அவனை யிரந்தோனும் பிறரும் இலனென்னும் இனிவரவு கூறாவண்ணங் கொடுத்தல்.

இவ்வுரைகட்கெல்லாம் ' ஈதல் ' என்பது 139 ஆம் குறளிலுள்ள ' சொலல் ' என்பது போலப் பன்மையாம். இக்குறளால், உயர்குடிப் பிறந்தோன் ஈகையாளனே யன்றிப் பிராமண னல்லன் என்பது பெறப்பட்டது.