பக்கம் எண் :

இன்னா திரக்கப் படுத லிரந்தவ
ரின்முகங் காணு மளவு.

 

இரந்தவர் இன்முகம் காணும் அளவு - ஒருபொருளை இரந்தவர் அதைப் பெற்றதினால் மலரும் அவரது இனிய முகத்தைக் காணுமளவும்; இரக்கப்படுதல் இன்னாது - இரத்தலேயன்றி இரக்கப் படுதலும் குடிப்பிறந்தானுக்குத் துன்பந்தருவதாம்.

படுதலும் என்னும் எச்சவும்மையும் அளவும் என்னும் முற்றும் மையுந் தொக்கன. இன்முகங் காணுமளவுந் துன்பமென்றதனால், இரந்த பொருள்களை யெல்லாம் ஈதல் வேண்டுமென்பது பெறப்பட்டது. ஆயினும், தன் மானத்திற்கு இழுக்கு நேராவாறு என்னும் வரையறை பகுத்தறிவாற் கொள்ளப்பெறும்.