பாத்து ஊண் மரீஇ யவனை-எப்போதும் பலரொடும் பகிர்ந்துண்டு பயின்றவனை; பசி என்னும் தீப்பிணி தீண்டல் அரிது-பசியென்று சொல்லப்படும் கொடிய நோய் தாக்குதலில்லை. நாள்தோறும் வந்து வருத்துவதாலும், நல்லார் வல்லாருட்பட எல்லாரையுந் தாக்குவதாலும், எம்மருந்தாலும் அறவே நீக்கப்படாமையாலும், பிற நோய்கள் அழிக்காதவற்றையும் அழித்து மறுமையிலுந் துன்புற வழிகோலுவதாலும், பசி தீப்பிணி யெனப் பட்டது . "இறைக்க வூறும் மணற் கேணி; ஈயப் பெருகும் பெருஞ் செல்வம் ." ஆதலின், பாத்துண்டு பயின்றவனைப் பசிப்பிணி தீண்டுவதில்லை. தீண்டுவதுமில்லை யெனவே வருத்தாமையைச் சொல்ல வேண்டுவதில்லை. 'மரீஇ' (மருவி) இன்னிசையளபெடை. அரிது என்பது இங்கு இன்மைப் பொருளது.
|