பக்கம் எண் :

இரத்தலி னின்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்.

 

நிரப்பிய தாமே தமியர் உணல்-தாம் ஈட்டக் கருதிய பொருட்குறையை நிரப்பவேண்டி வறியார்க் கொன்றீயாது தாமே தமித்துண்டல்; மன்ற-திண்ணமாக; இரத்தலின் இன்னாது-இரத்திலினும் தீயதாம்.

ஆசைக்கோரளவில்லை யாதலின், ஈயாத கஞ்சர் மேன்மேலும் பொருளீட்டற் பொருட்டு இடைவிடாது உடலையும் உள்ளத்தையும் வருத்தி, எத்துணைப் பொருளீட்டினும் எள்ளளவும் பொந்திகை (திருப்தி) யின்மையால் உண்மையிற் செல்வராயினும் உள்ளத்தில் வறியராய், இன்பமும் அறப்பயனும் ஒருங்கே தரும் பாத்துண்டலின்றி நடைப்பிணமாய் உழல்வதினும்; ஆசையுங் கவலையுமில்லாத இரப்போர் உடல் வருத்தமின்றித் தாம் பெற்றதைக் கொண்டு மகிழ்வதோடு, தாம் இரப்பெடுத்ததையும் பகிர்ந்துண்ணும் வாழ்க்கை மேலாதலின்; 'இரத்தலினின்னாது' என்றார். 'மன்ற' தேற்றப் பொருளிடைச் சொல் . 'நிரப்பிய' செய்யிய என்னும் வாய்பாட்டு எதிர்கால வினையெச்சம்.