சாதலின் இன்னாதது இல்லை-ஒருவனுக்கு இறத்தலைப்போலத் துன்பந் தருவது வேறொன்றுமில்லை; அதுவும் ஈதல் இயையாக்கடை இனிது-அவ்விறப்பும் வறியார்க்கொன்றீதல் இயலாவிடத்து இன்பந்தருவதாம். ஈகையாளனுக்கு இறப்புத் துன்பத்திலும் ஈயாத்துன்பம் பெரியதும் பொறுத்தற்கரியது மாதலின், சாதல் அவனுக்கு இனிதென்றார். இது வெளிப்படை. இனி, ஈயாத கஞ்சர் உலகத்திலிருத்தல் தகாது என்பது குறிப்பு. "ஈயாத புல்லரிருந்தென்ன போயென்ன எட்டிமரம்; காயாதிருந்தென்ன காய்த்துப் பலனென்ன" என்று படிக்காசுப் புலவரும் பாடியமை காண்க. 'இனிததூஉம்' இன்னிசை யளபெடை.
|