பக்கம் எண் :

உரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன்
றீவார்மே னிற்கும் புகழ்.

 

உரைப்பார் உரைப்பவை எல்லாம் - உலகத்தில் ஒருவரைப் பற்றிச் சிறப்பாகச் சொல்வதெல்லாம்; இரப்பார்க்கு ஒன்று ஈவார்மேல் நிற்கும் புகழ் - வறுமையால் இரப்பவர்க்கு அவர் வேண்டிய தொன்றை ஈவார்மேல் நிற்கும் புகழே.

உரைத்தல் உரைநடையுஞ் செய்யுளுமாகிய இருவடிவிலும் நிகழுமாதலின், இங்கு உரைத்தலென்றது அவ்விருவடிவிற்கும் பொதுவாம். மேற்குறளிற் குறிப்பாகச் சொன்ன ஈதல்வகை இங்கு வெளிப்படையாகக் கூறப்பட்டது.