பக்கம் எண் :

தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்
தோன்றலிற் றோன்றாமை நன்று.

 

தோன்றின் புகழொடு தோன்றுக-ஒருவர் இவ்வுலகத்திற் பிறக்கின் புகழ்க் கேதுவான குணத்தொடு பிறக்க; அஃது இலார் தோன்றலின் தோன்றாமை நன்று-அக்குண மில்லாதார் பிறத்தலை விடப் பிறவாதிருத்தலே நல்லது.

பிறத்தலும் பிறவாமையும் இறைவன் ஏற்பாட்டின்படி அல்லது ஊழின் அமைப்புப்படியே நிகழ்வதால், அவை பிறப்பவரின் உணர்ச்சியொடு கூடியனவும் விருப்பிற்கு அடங்கியனவுமல்ல. ஆதலால், இங்குத் 'தோன்றுக', 'தோன்றற்க' என்று கூறியதெல்லாம், புகழுக் கேற்ற நல்வினை செய்வானைப் பாராட்டியதும் அது செய்தானைப் பழித்ததுமேயன்றி வேறல்ல என அறிக . புகழ் என்பது இங்கு ஆகுபொருளது.