இசை இலா யாக்கை பொறுத்த நிலம்-புகழைச் செய்யாத வுடம்பைச் சுமந்த நிலம்; வசை இலா வண்பயன் குன்றும்-பழிப்பில்லாத வளமுள்ள விளைச்சல் குறையும். உயிரோடு கூடியிருந்தும் அதனாற் பயன் பெறாமையின் 'யாக்கை' என்றார். மக்களின் தன்மைக் கேற்ப அவர் வாழும் நிலமுமிருக்கும் என்பது, "எவ்வழி நல்லவ ராடவ-ரவ்வழி நல்லை வாழிய நிலனே". என்னும் (புறம். 188) ஒளவையார் கூற்றானும் அறியப்படும். இனி, உடம்பு பெரும்பாலும் நிலத்தின் கூறாதலின், தன்னைப் போற் பயன்படாத தன் கூற்றைச் சுமப்பது தனக்கிழி வென்னும் வெறுப்பினால் நிலம் தன்வளங் குன்றும், எனவும் ஒரு கருத்துத் தோன்ற நின்றது. பயன் குன்றும் என்பது பயன்படும் என்பது போல ஒரு சொற்றன்மைப் பட்டதாகும்.
|