இறந்தார் இறந்தார் அனையர்- சினத்தின் கண் அளவுகடந்தவர் உயிரோடிருப்பினும் செத்தவரை யொப்பர்.சினத்தை துறந்தார் துறந்தார் துணை- சினத்தை முற்றும் விட்டவர் இருவகைப் பற்றையும் முற்றத் துறந்தா ரளவினராவர். 'சினத்தை .......துணை' என்பதற்கு, "சினத்தை துறந்தார் சாதற்றன்மையராயினும் அதனை யொழிந்தாரளவினர்... சினத்தை விட்டார்க்குச் சாக்கா டெய்து தற்குரிய யாக்கை நின்றதாயினும், ஞானத்தான் வீடுபெறுதல் ஒரு தலையாகலின் அவரை வீடு பெற்றாரோடொப்ப ரென்றுங் கூறினார்" என்று பரிமேலழகர் உரைத்திருப்பது உயர்வாய்த் தோன்றினும் சற்று வலிந்து பொருள் கொண்டதாகும். 'சினத்தை' என்பது முன்னும் பின்னும் இசையும் தாப்பிசைப் பொருள்கோளும் இடைநிலை விளக்கணியுமாம். |