அறவினை - அறமாகிய நல்வினையை; ஒல்லும் வகையான் - தத்தமக் கியன்றவாறு; செல்லும்வாய் எல்லாம் ஒவாதே செயல் - அது நடை பெறக் கூடிய வழியெல்லாம் இடைவிடாது செய்க. ஒல்லும் வகையாவது, இல்லற வினையை இடம்பொருளேவற்கு ஏற்பவும், துறவறவினையை உடம்புநிலைக்கும் உளநிலைக்கும் ஏற்பவும், செய்தல். செல்லும் வாய்கள் மனம் மொழி மெய் என்னும் முக்கரணங்கள். அவற்றாற் செய்யப் பெறுவன நல்லெண்ணம் நன் சொல் நற்செயல் என்பன. வாய் என்பது வழியை மட்டுமன்று இனத்தையுங் குறித்தலால், 'செல்லும் வாய்' என்பன எல்லா அறத் துறைகளுமாம். |