மணற்கேணி தொட்ட அனைத்து ஊறும் - மணவில் தோண்டிய நீர்க்கிடங்கில் தோண்டிய அளவிற்கு நீரூறும்; மாந்தர்க்குக் கற்ற அனைத்து அறிவு ஊறும் -அதுபோல் மக்கட்குக் கல்விகற்ற அளவிற்கு அறிவூறும். மணற்கிடங்கு சிறிதே தோண்டினால் ஊறும் நீர் போதாது. சற்று ஆழமாகத் தோண்டினாற் போதிய நீர் ஊறும். அதன்மேலும் தோண்டத் தோண்ட ஊறுமாதலால் , அவரவர் தேவைக்குத் தக்கவாறு தோண்டிக் கொள்ளல்வேண்டும். அதுபோல் , கல்வியும் சிறிது கற்ற அளவில் அறிவு நிரம்பாது; பேரளவு கற்றால் வேண்டிய அறிவு அமையும். அதன்மேலுங் கற்பது அவரவர் தேவையையும் விருப்பத்தையும் ஆற்றலையும் ஓய்வையும் வாழ்நாளளவையும் பொறுத்ததாம். இக்குறளில் வந்துள்ளது எடுத்துக்காட்டுவமை. "நுண்ணிய நூல்பல கற்பினு மற்றுந்தன் ணுண்மை யறிவே மிகும்." (373)
என்னுங் குறளிற்கூறியது அறிவு பயன்படும் வகைபற்றிய தென்றும், இங்குக் கூறியது அறிவு வளரும் வகை பற்றிய தென்றும், வேறுபாடறிக.
|