பக்கம் எண் :

வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க்
கியாண்டு மிடும்பை யில.

 

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு - விருப்பு வெறுப்பில்லாத இறைவனடியைச் சேர்ந்தவர்க்கு; யாண்டும் இடும்பை இல-எங்கும் எக்காலத்தும் துன்ப
மில்லை.

விருப்பு வெறுப்பினாலேயே துன்பங்கள் வருவதனாலும், விருப்பு வெறுப்பில்லாத இறைவனை யடைந்தவரும் விருப்பு வெறுப்பற்றவராயிருப்பராதலாலும், இறைவன் இன்ப வடிவினனாகவும் எல்லாம் வல்லவனாகவுமிருப்பதனாலும், அவனடியடைந்தார்க்கு எங்கும் என்றும் எவ்வகைத் துன்பமும் இல்லையென்பது.