இல்வாழ்வான் என்பான் இல்லறத்தில் வாழ்பவன் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் வேளாளன்; இயல்புடைய மூவர்க்கும்-இல்லறத்தில் வாழும் இயல்புடைய ஏனை மூவர்க்கும்; நல்லாற்றின் நின்ற துணை-அவர் செல்லும் நல்லற நெறிக்கண் நிலைபெற்ற துணையாம். ஏனை மூவராவார் இருவகை யந்தணருள் இல்லறத்தானான பார்ப்பானும் அரசனும் வணிகனுமாவர். 'இயல்புடைய' என்னும் அடைமொழி அதிகார இயைபினால் இல்லறத்தாரைக் குறிக்குமேயன்றித் துறவறத்தாரைக் குறிக்காது. அந்தணர் (பார்ப்பார்) முதலிய நால்வரும் இல்லறத்தாரா யிருப்பரேனும், அவருள் தலைசிறந்தவர் வேளாளரே யென்பது கருத்து. "உழுவா ருலகத்திற் காணியஃ தாற்றா தெழுவாரை யெல்லாம் பொறுத்து." "ஏரி னுழாஅ ருழவர் புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால்." "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந் தொழுதுண்டு பின்செல்பவர்." "தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங் கைம்புலத்தா றோம்ப றலை." "இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு." "வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்." என்று திருவள்ளுவரும், "வேளாள னென்பான் விருந்திருக்க வுண்ணாதான்" என்று நல்லாதனாரும், கூறியிருத்தலையும், 'இல்வாழ்வான்' என்பதனோடொத்த 'குடியானவன்' என்னுஞ் சொல் உலக வழக்கில் உழவனையே குறித்து வருதலையும் நோக்குக. ஆரியர் வருமுன் ஐயரென்றும் பார்ப்பாரென்றும் சொல்லப்பட்ட இருவகையந்தணரும் தமிழரே. அவருள் முன்னவர் துறவியர்; பின்னவர் ஆசிரியர் புலவர் பண்டாரம் உவச்சர் குருக்கள் திருக்கள் நம்பியர் போற்றியர் எனப் பல்வேறு பெயர்பெற்ற இல்லறத்தார். ஏனை மூவகுப்பார் போன்றே அந்தணரும் இருவகுப்பார் என அறிக. திருவள்ளுவர் பிராமணீயம் என்னும் ஆரியத்தை ஓழிக்கவே நூல் செய்தாராதலின், பிரமசரியம் வானப்பிரத்தம் சந்நியாசம் என்னும் முந்நிலைப்பட்ட பிராமணரைக் காத்தலைத் தமிழ வேளாளன் கடமையெனக் கூறியிரார் என்பது தெளிவுறு தேற்றமாம். "அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை" என்று ஆசிரியர் கூறுவதால்,'நல்லாறு' என்றது இல்லறத்தையே என்பது துணியப்படும்.'என்பான்' என்னும் செய்வினை வாய்பாட்டுச் சொல் செயப்பாட்டு வினைப் பொருளது. |