பக்கம் எண் :

துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு
மில்வாழ்வா னென்பான் றுணை.

 

துறந்தார்க்கும்-உலகப்பற்றைத் துறந்தவர்க்கும்; துவ்வாதவர்க்கும்-உண்பதற்கில்லாத வறியர்க்கும்: இறந்தார்க்கும்-ஒருவருமின்றித் தன்னிடம் வந்து இறந்தார்க்கும்; இல்வாழ்வான் என்பான் துணை-இல்லறத்தான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன் துணையாம்.

"உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவதூஉம்
விட்டேமென் பார்க்கு நிலை".

"இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்".

என்று ஆசிரியர் வேறிடத்துங் கூறுதல் காண்க.

"துறந்தார் பொருமை" (22) "துறந்தாரின் தூய்மை" (159), "துறந்தார்க்குத் துப்புரவு "(263) , "துறந்தார் படிவத்தர்" (586) என வருமிடமெல்லாம், துறந்தார் என்னுஞ்சொல் செய்வினைப் பொருளே தருதலால், "களைகணானவராற்றுறக்கப் பட்டார்க்கும்" என்று பரிமேலழகர் ஈண்டு செயப்பாட்டுவினைப் பொருள் கூறுவது பொருந்தாது. முந்தின குறளுரையில் அவர் மூவகைப் போலித் துறவியரைப் பொருத்தியதினாலேயே இங்கு இவ்வாறுரைக்க நேர்ந்தது. களைகணானவரால் துறக்கப்பட்டவரும் துவ்வாதவருள் அடங்குவர். இறந்தார்க்குச் செய்யுந்துணை ஈமக்கடனும் இறுதிக் சடங்கும் தென்புலத்தார் படையலுமாம்.